கள்ள மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுடை இந்தியா நிராகரித்தது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மருந்துகள் கள்ளத்தனமாக தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு விலை மலிவான மருந்து தயாரிப்புக்கு எதிரான தாக்குதல் என்றும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் “ஸ்பெஷல் 301 ரிப்போர்ட்” (Special 301 Report) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவுசார் சொத்துடமை பாதுகாப்பு தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிடப்படும் இந்த அறிக்கையில், அறிவுசார் சொத்துடைமை மீறலுக்காக கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.


கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டு உலகளவில் விற்பனையாகும் மருந்துகளுக்கு இந்தியாவும், சீனாவும் மூலாதாரமாக திகழ்வதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிராண்ட் பெயரிலான மருந்துகளை, காப்புரிமை விதிகளை மீறி, பொதுப்பெயர் அல்லது வேதிப்பெயரில் தயாரித்து இந்தியாவும் சீனாவும் உலக அளவில் விற்பனை செய்கின்றன என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், இந்திய சந்தையில் விற்பனையாகும் மருந்துகளில் 20 சதவீதம் கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்ட மருந்துகள் என்றும் அமெரிக்க அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ள இந்தியா, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அறிக்கையையும் நிராகரித்துள்ளது.


எந்த முறையில், என்ன அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன்(Preeti Sudan) கூறியுள்ளார். உலகிற்கே மருந்தகமாக திகழும், இந்திய மருந்து தயாரிப்பு தொழிற்துறையின் வளர்ச்சிக்கும் வேதிப்பெயரில் குறைந்த விலையில் மருந்து தயாரிப்பதற்கும் எதிரான குரல் இது என்றும் பிரீத்தி சுதன் தெரிவித்துள்ளார். வேதிப்பெயரிலான மருந்துகள் விலை மலிவானவை என்றாலும், தரமானவை என்றும், சான்றளிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.