சிக்கிமில் உள்ள நத்தூலா அருகே கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்திய ராணுவம் சுற்றுலா வந்த 2,500 மக்களை மீட்டுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசி வருகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் ஜம்முவில் பல பகுதிகளில் ஏரிகள் உறைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.   


இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நீடித்தது.



இதுபற்றி தகவல் அறிந்த ராணுவ வீரர்கள், அங்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.