இரண்டு நாள் பயணமாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய 3000 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் வசிக்கும் கிட்டத்தட்ட 100,000 இலங்கை அகதிகள், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என கூறப்படுகிறது. பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின்போது தப்பி வந்த அவர்கள் மீண்டும் தங்கள் தீவு தேசத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படலாம் என்ற கவலையினை தூண்டியுள்ளது.


இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆனது முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த துன்புறுத்தப்பட்ட இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு விரைவான குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதாவது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரான 100,000 இலங்கை தமிழர்களை இந்த சட்டம் விலக்கியுள்ளது. 


இதன் காரணமாக தெற்கு தமிழ்நாடு மாநிலத்தில் அகதிகளாக சுமார் 60,000 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை கேள்விகுறியாகியுள்ளது.


இலங்கையில் இருந்து அகதிகளாக தற்போது இந்தியா தஞ்சம் புகுந்துள்ள பலர் இந்தியாவின் குடிமக்களே...  பலர் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டு அங்கேயே தங்கள் இருப்பிடங்களை உருவாக்கினர். பின்னர் இலங்கை உள்நாட்டு களவரத்தில் பாதிக்கப்பட்டு தங்கள் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பினர் என கூறப்படுகிறது. என்றபோதிலும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது குறித்த இந்த தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மறுக்கிறது என்பது வேதனை.