உத்தரபிரதேசத்தில் பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 100- ஆகா உயர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் - பீகார் மாநிலம் பாட்னா இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்தூரில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, வாரணாசி வழியாக பாட்னா செல்லக்கூடியதாகும். இன்று அதிகாலை 12.56 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் ஓராய் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்றுவிட்டு அடுத்துஉள்ள கான்பூருக்கு புறப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ரெயில் கான்பூர் சென்றடைய வேண்டும். ஆனால் கான்பூரை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் புக்ரயான் என்ற இடத்தில் வந்தபோது திடீர் என்று ரெயில் தடம்புரண்டது. 


ரெயில் அப்போது வேகமாக சென்று கொண்டு இருந்ததால் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது.மொத்தம் 22 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 14 பெட்டிகள், தடம்புரண்டு கவிழ்ந்தது. இதில் S-2 பெட்டி மிக மோசமான அளவுக்கு சேதம் அடைந்தது. அந்தப் பெட்டியில் இருந்த பலர் பலத்த அடிபட்டு இறந்தனர்.தகவல் கிடைத்ததும் ரெயில்வே மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


அவர்கள் இடிபாடுகளை அகற்றி பலியானவர்களின் உடல்களை மீட்டு வருகிறார்கள். 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 


உத்தரபிரதேச முதல் - மந்திரி அகிலேஷ்யாதவ் மீட்பு பணியை துரிதப்படுத்துமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ்கள் இடையூறு இன்றி வந்து செல்ல வழி ஏற்படுத்தி தருமாறும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் மாநில சுகாதாரத்துறை டைரக்டர் ஜெனரல், சட்டம் ஒழுங்கு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ் 250 போலீஸ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.


ரெயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு உத்தரவிட்டுள்ளார்.