ஐஆர்சிடிசி ஓட்டல் ஊழல்: லாலு, அவரது மகன் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
கடந்த 2006-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறைக்கு சொந்தமான பாரம்பரிய ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் செய்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி லாலு பிரசாத், அவரது மனைவி(ராப்ரி தேவி) மற்றும் மகன்(தேஜஷ்வி) மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் லாலு மற்றும் அவரது மகன் இருவரும் அடுத்த வாரம், அதாவது 11-ம் தேதி லாலு பிரசாத் யாதவும், அடுத்த நாள்(12-ம் தேதி) அவரது மகன் தேஜஸ்வி யாதவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 7-ம் தேதி லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என டெல்லி, பாட்னா, ராஞ்சி, பூரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தியது.
மேலும் கடந்த மே 25-ம் தேதி ரூ.1000 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுமான, எம்.பி.யுமான மிஸா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.