வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் - முழு விளக்கம் இதோ!
Wayanad Landslides: இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.
Wayanad Landslides NRSC ISRO Satellite Images: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 30) நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட இந்த பேரிடரில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடித்த அதி கனமழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கிருக்கும் இருவைப்புழா ஆற்றிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வயநாட்டின் மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வீடுகள், குடியிருப்பு கட்டடங்கள், பள்ளிகள், கோவில்கள், வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டு அனைத்து இடங்களிலும் சேரும், சகதியும் நிரம்பின.
மண்ணுகடியில் ஊசலாடும் உயிர்கள்
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்தும், மண்ணுக்கடியில் இருந்தும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரும் வீடுகளை இழந்து, குடும்பத்தினரை இழந்து மீளா துயரில் முகாம்களில் வசித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகள், மருந்துகள், உடைமைகள் ஆகியவற்றை நிவாரணமாக அளித்து ஆறுதல் அளித்து வருகின்றனர். நாடு முழுவதும் இருந்து வயநாட்டின் நிவாரணத்திற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | 'அப்போவே எச்சரித்தோம்... என்ன செய்தது கேரள அரசு...' - திடீரென சூடான அமித் ஷா
மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், வயநாட்டின் செயற்கைகோள் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அந்த உயர் தர செயற்கைகோள் புகைப்படங்கள் வயநாட்டில் ஏற்பட்டுள்ள உக்கிரமான பாதிப்புகளை வெளிக்காட்டுகின்றன.
நிலச்சரிவு தொடங்கிய இடம்
நிலச்சரிவுகளால் சுமார் 86 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பும், இருவைப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்கும் இடிபாடுகளும், பாதிப்புகளும் விரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சூரல்மலை பகுதியிலும், அதனை சுற்றிலும் பெய்த கனமழையின் காரணமாகவே தொடர் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக செயற்கைகோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
(கீழ் புகைப்படம்: நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன் - இதில் பழைய நிலச்சரிவும் பதிவாகியிருக்கிறது; மேல் புகைப்படம்: நிலச்சரிவு ஏற்பட்டதற்கு பின் - நிலச்சரிவு ஏற்பட்ட இடம் அம்புக்குறியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது IMAGE COURTESY: NSRC)
கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, 1,550 மீட்டர் உயரத்தில் உருவானதாக செயற்கைகோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவினால் ஏற்பட்ட சிதிலங்கள் அனைத்தும் இருவைப்புழா ஆற்றின் போக்கையே விரிவுப்படுத்தியிருப்பதையும் அந்த புகைப்படங்கள் விளக்குகின்றனர். இதனால், ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள், கட்டடங்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்திருக்கின்றன.
நிலச்சரிவுக்கான காரணம்?
மேலும், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இந்த பருவமழை காலகட்டத்தில் கடுமையான தொடர் மழைப் பொழிந்ததால், ஒட்டுமொத்த கோன்கன் பகுதியும் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
(IMAGE COURTESY: NSRC)
இரண்டு வாரக்காலம் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மண்ணில் ஈரப்பதம் அதிகமாகியிருக்கிறது. அதுவும் கடந்த திங்கள் அன்று மிக ஆழமான மீசோஸ்கேல் மேக அமைப்பு உருவானதை தொடர்ந்து, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய இடங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனாலேயே நிலச்சரிவு நிகழ்ந்திருக்கிறது.
மேலும், தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் ஏற்கெனவே ஒரு பழைய நிலச்சரிவு இருப்பதையும் அந்த செயற்கைகோள் புகைப்படம் எடுத்துக்காட்டி உள்ளது. மேலும், இந்த இடங்களில் பேரிடர் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
செயற்கைகோள் புகைப்படங்களால் என்ன பயன்?
இந்த செயற்கைகோள் அனைத்தும் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC) மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இஸ்ரோவின் மேம்பட்ட கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோள் மற்றும் RISAT செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள் மேகங்களை ஊடுருவிச் சென்று நிலத்தின் இந்த பேரழிவு காட்சிகளை கைப்பற்றியிருக்கின்றது.
இந்த செயற்கைகோள் படங்கள் உடனடி மீட்பு முயற்சிகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் நிலவும் புவியியல் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் பங்களிக்கும் எனலாம். எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள பேரிடர்களுக்கு தயார்நிலையில் இருக்கவும், முன்னெச்சரிகை உத்திகளை வகுக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ