வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!

Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவுக்கு மிக அதிக கனமழை முக்கிய காரணம் என்ற நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 30, 2024, 12:32 PM IST
  • வயநாட்டில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
  • வயநாட்டில் அதிகளவில் மழைப் பொழிவாகி உள்ளது.
  • இன்று கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!  title=

Wayanad Landslides, Kerala Rainfall Latest Updates: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை பகுதியிலும், அதிகாலை 4 மணியளவில் சூரன்மலை பகுதியிலும் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முண்டக்கை, மேப்பாடி, சூரன்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது முண்டக்கையில் உள்ள அட்டமலை பகுதிக்குச் செல்லும் ஆற்றுப் பாலம் இடிந்த இந்த நிலையில், அங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீட்புப் படையினர் ஆற்றைக் கடந்த மக்களை மீட்க விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலச்சரிவில் இன்னும் பலரும் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

தீவிரமடையும் மீட்புப்பணிகள்

நிலச்சரிவு ஏற்பட்ட அந்த பகுதி முழுவதும் வெள்ளமும், சகதியுமாக தோற்றமளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. முண்டக்கை, மேப்பாடி பகுதியில் வீடு, கோவில், பாலம் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க | வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு - கேரளாவில் கொடூரம்

தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ராணுவம், விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரம் முழுவதும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

இந்தச் சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு உள்ளிட்ட கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது. காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடிக்கி, ஆழப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாநிலங்களில் மிக அதிக மழை எச்சரிக்கையும் (ஆரஞ்சு அலெர்ட்), கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் கனமழையும் (மஞ்சள் அலெர்ட்) பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளையும் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் மழையின் தாக்கம் குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

அதிகளவில் மழைப்பொழிவு

கேரளாவின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X தளத்தில் பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறார். அதில்,"கேரளாவில் சமவெளி மற்றும் மலைத்தொடர்களில் அதிகளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பல அணைகளும் நிரம்பியுள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் கக்காயம் அணை பகுதியில் 363 மி.மீ., மழையும், வயநாட்டில் உள்ள பதிஞ்சரதாரா அணையில் 333 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.  கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் 200+ மிமீ மழை பெய்திருப்பதாக கூறினார். 

யாரும் எதிர்பார்க்கவில்லை

முன்னதாக, பிரதீப் ஜான் அவரது X பதிவுகளில்,"கர்நாடகாவின் குடகு, ஹாசன், சிக்மளூர்; கேரளா மற்றும் தமிழ்நாட்டின் நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் மழை பெய்யலாம். ஆகஸ்ட் 1 முதல் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும்.

இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆம், கனமழை எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எப்படியோ கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் முழுவதும் மேகங்கள் அப்படியே தேங்கியதால் இந்தளவிற்கு மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. கேரளாவில் பருவமழை தொடங்கியதில் இருந்து இன்று வரை மிக அதிக அளவில் பெய்த மழை இதுவாகும். வால்பாறை அணைகள் மற்றும் நீலகிரி அணைகளில் அதிக அளவு நீர்வரத்து உள்ளது. கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது" என்றார்.

 

மேலும் படிக்க | சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News