பாஜகவின் புதிய தேசிய தலைவராக JP நட்டா போட்டியின்றி தேர்வு...!!
பாஜக செயல் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யபட்டுள்ளார்!!
பாஜக செயல் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யபட்டுள்ளார்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இன்றே அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார். புதிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவர் ஆனார். அவரது தலைமையில் கட்சி, நல்லதொரு வளர்ச்சியை பெற்றது. அவரது தலைமையில்தான் 2019 பாராளுமன்ற தேர்தலை கட்சி சந்தித்தது. அதில், முந்தைய 2014 தேர்தலைவிட கூடுதல் இடங்களை பிடித்து பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அப்போது கட்சிக்கு தேர்தல்களில் தொடர் வெற்றியை தேடித் தந்த நிலையில் அமித் ஷா, பிரதமர் மோடியின் 2-வது அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனாலும், அவர் கட்சிப்பதவியில் தொடர்ந்தார். பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெ.பி.நட்டா பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையே அவரை தேசிய தலைவராக நியமிப்பதற்கான நடைமுறைகள் அண்மையில் தொடங்கின. அவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா அலுலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், ஒருமனதாக ஜெ.பி.நட்டா தேர்வானதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
59 வயதாகும் ஜே.பி. நட்டா, இமாசலப் பிரதேசத்தை சேர்ந்தவராவார். அவரது முழுப் பெயர் ஜேகத் பால் நட்டா ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது தீவிர பணியால், மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்திலுள்ள 80 தொகுதிகளில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் முயற்சிகளை முறியடித்து 62 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.