சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதிவியேற்பு!
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதிவியேற்றார். இவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
முன்னதாக சட்ட விதிகளின்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவித்தது.
தீபக் மிஸ்ரா (63 வயது) சுப்ரீம் கோர்ட்டின் 45-வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றார். அந்தப் பதவியை அவர் தொடர்ந்து 13 மாதங்கள் வகிப்பார்.
முன்னதாக, கடந்த 1977-ம் ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிஸா ஐகோர்ட்டில் பல்வேறு விவகாரம் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார்.
இதையடுத்து, பாட்னா, டெல்லி ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி ஐ கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், பல்வேறு முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா அளித்துள்ளார். அந்தத் தீர்ப்புகளில், மும்பைத் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கும், பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பும் அடங்கும்.