காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை வேட்பாளராக அறிவிப்பு
பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே, மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் ஜோதிராதித்யா சிந்தியா பெயரும் இடம் பிடித்துள்ளது.
புது டெல்லி: பாரதீய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்த சிறிது நேரத்திலேயே, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்களில் ஒருவராக ஜோதிராதித்யா சிந்தியா (Jyotiraditya Scindia) பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு, இன்று (புதன்கிழமை) மாலை பாஜக ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் சிந்தியாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மத்திய பிரதேசத்தில் இருந்து மூன்று இடங்கள் மாநிலங்களவைத் தேர்ந்தடுக்கப்பட உள்ளன.
செவ்வாய்யன்று தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்ட சிந்தியா, பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் புதன்கிழமை பாஜகவில் சேர்ந்தார்.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடன் பேசிய சிந்தியா (Jyotiraditya Scindia) கூறுகையில்.... “பாஜக தலைவர் நட்டா ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னை தங்கள் குடும்பத்தில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என கூறினார். மேலும், "இதுவரை எனது வாழ்க்கையை மாற்றும் 2 நிகழ்வுகள் நடந்துள்ளன - அதில், ஒன்று.. நான் என் தந்தையை இழந்த நாள் மற்றும் இரண்டாவது, நேற்று நான் என் வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்தது" என்று அவர் கூறினார்.