காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை கைது செய்வது தொடர்பாக பெங்களூரில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017 ஆம் ஆண்டில் கர்நாடகத்தின் எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட புகாரில் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில், கணக்கில் வராத எட்டே முக்கால் கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கிட்டியதாகவும், பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.


வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அன்று தொடங்கி நேற்று வரை சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிறகு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி நேற்றிரவு சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது. கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவக்குமார் கைதை கண்டித்து கர்நாடகத்திலும், டெல்லியிலும் அமலாக்கத்துறையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.


சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு இன்று காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதன்படி, கர்நாடகத்தில் இன்று பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைவர்களும் தொழிலாளர்களும் பெங்களூரில் போராட்டம் நடத்தினர்.



ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசியும், சில இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டார். ஆங்காங்கே சிவக்குமார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.