Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம் - ஏன்?
Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Karnataka Lok Sabha Election Result 2024: 18வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். குறிப்பாக இந்த தேர்தல் பாஜக vs காங்கிரஸ் என்றில்லாமல் பாஜக vs மாநில கட்சிகள் என்ற ரீதியில்தான் அமைந்துள்ளது.
அந்த வகையில், மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் சில முக்கிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியாக வேண்டும். அதில் கர்நாடகா அனைத்து மக்களவை தேர்தல்களிலும் முக்கியத்துவம் பெறும். அது இந்த முறை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக கடந்த முறையை விட அதிக இடங்களை பெறும்பட்சத்தில் அசைக்க முடியாத கட்சியாக அது உருவெடுக்கும். தென் மாநிலங்களில் கர்நாடகாவில்தான் பாஜகவுக்கும் சரி, காங்கிரஸ் கட்சிக்கும் சரி நேரடியாக போட்டியாக இருக்கும் எனலாம்.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப். 26 மற்றும் மே 7ஆம் தேதிகளில் தலா 14 தொகுதிகளாக இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 474 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 25 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி மொத்தம் 28 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.
மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்...டாக்டர் சுபாஷ் சந்திரா பேச்சு!
முக்கிய வேட்பாளர்கள்
பாஜக சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா, ஹாவேரியில் முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா, ஜேடிஎஸ் சார்பாக மாண்டியாவில் ஹெச்.டி குமாரசாமி மற்றும் ஷிவமொக்காவில் முன்னாள் முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 25 தொகுதிகளை வென்றது. மேலும், கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா 1 தொகுதியை வென்றன. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.
காத்திருக்கும் காங்கிரஸ்...
கடந்தாண்டு டிசம்பரில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக ஆட்சியை இழந்தது. 135 தொகுதிகளை வென்று காங்கிரஸ் அங்கு ஆட்சியை கைப்பற்றியது. 1989ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், தொகுதி வாரியாகவும், வாக்கு சதவீதம் வாரியாகவும் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி இதுதான். இதனால்தான், இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் அதிகளவில் மக்களவை தொகுதியை கைப்பற்றும் என கணிப்பு பல தரப்பில் இருந்து வருகிறது.
பாஜகவின் தொடரும் ஆதிக்கம்...
இருப்பினும், சட்டமன்ற தேர்தல் எப்படியிருந்தாலும் மக்களவை தேர்தல் என்றால் பாஜகவுக்குதான் அதிகம் சாதகம் இருந்திருக்கிறது. குறிப்பாக 1999ஆம் ஆண்டுக்கு பின் பாஜக 18 மக்களவை தொகுதிகளுக்கு குறையாமல் அங்கு வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுமே பாஜகவுக்குதான் அதிகம் சாதகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, வரலாற்றை உடைத்து காங்கிரஸ் இங்கு 18க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுமா அல்லது கர்நாடகாவில் பாஜகவின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்தியில் ஆட்சியை அமைக்க கர்நாடகாவில் இரு கட்சிகளும் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற துடிக்கும் எனலாம்.
மேலும் படிக்க | 64.2 கோடி வாக்காளர்கள்.. சாதனை படைத்த தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ