கார்த்தி சிதம்பரம் கைதானதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கார்த்தி சிதம்பரம் கைதானதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்பின்னர் அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிபிஐ அதிகாரிகள் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ வழக்கறிஞர் குற்றச்சாற்று. அதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், எந்த ஒரு சம்மனும் அனுப்பவில்லை.
சம்மன் அனுப்பாத போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று எப்படி கூற முடியும். ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று தான் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிக்கு செல்கிறார் எனவும் கூறினார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை எனவும் கூறினார்.
இதையடுத்து அவரது வழக்கறிஞர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் கைதானதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.