காஷ்மீர்: பயங்கரவாதி புர்ஹான் வானி கொலை அமர்நாத் யாத்திரை ஒருநாள் ரத்து
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் புர்ஹான் வானி. சமீபத்தில் இவன் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டான். அதில் அவன், “காஷ்மீரில் பண்டிட்டுக்களுக்கு என்று தனி குடியிருப்பு அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் அந்த குடியிருப்புகளை அழிப்போம்” என்று மிரட்டல் விடுத்திருந்தான்.
காஷ்மீரில் தொடர்ந்து அமைதியை சீர்குலைப்பதால் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் அவனை தேடி வந்தனர். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் மேலும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டன.
தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அனந்த்நாக் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஸ்ரீநகரில் மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.