வயநாட்டில் நடந்த விழாவில் ராகுல் காந்தியின் பேச்சை சரளமாக மொழிபெயர்த்த கேரள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று காலை வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கருவாராக்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்டிக்கொடுத்த புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தத் தொடங்கினார். அப்போது, தனது உரையை பள்ளி மாணவர்களில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க விரும்பினால் முன்வரலாம் என அழைத்தார்.


இந்நிலையில், 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சஃபா செபின் தன்னார்வத்துடன் முன்வந்தார். ராகுல் காந்தியின் கேரளப் பயணங்களின் போது வழக்கமாக மொழிபெயர்க்கும் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான கே.சி.வேணுகோபால் சிரித்துக்கொண்டே அதே மேடையில் அமர்ந்திருந்தார். மேடை ஏறிய மாணவி சஃபா ராகுலுக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் பதில் வணக்கம் தெரிவித்தார். 


தனது சக பள்ளி மாணவர்கள் உற்சாகப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார் அம்மாணவி. உரையின் இறுதியில் மாணவி சஃபா-வை சிறப்பான மொழிபெயர்ப்புக்காகப் பாராட்டினார் ராகுல் காந்தி.  இந்தக் காட்சிகளைத்தான் இணையத்தில் பகிர்ந்து ஸபாவைக் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



மேலும், பள்ளி ஆசிரியைகளும், சக மாணவிகளும் ‌ஷபா பபினை பாராட்டினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இது குறித்து, ஷபா பபின் கூறுகையில்; நான் மதிக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ராகுல். மலப்புரம் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுலின் பேச்சை கேட்டு இருக்கிறேன். அவர் எங்கள் பள்ளிக்கூட விழாவிற்கு வருகிறார் என்றதும் அவரது பேச்சை கேட்கும் நோக்கத்துடனேயே சென்றேன். ஆனால் ராகுலின் பேச்சை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.