திருமணத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் கூடாது: கேரள அரசு
கேரளா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளின் போது பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என புதிய விதிமுறையை கேரள மாநில அரசு அறிமுகப்படுத்திய உள்ளது.
இயற்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கையாகவே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள சுற்றுச்சூழல் துறை அமைச்சக உயரதிகாரி கூறியது:-
கேரளத்தில் திருமண நிகழ்ச்சிகளின்போது அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, மக்காத பொருள்களான பிளாஸ்டிக் குவளைகள், தட்டுகள் ஆகியவை பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன. இதனால், கேரளத்தின் இயற்கைச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே, மாநிலத்தின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக, திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் வகை பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முதல்கட்டமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்குப் பதிலாக, திருமண நிகழ்ச்சிகளில் மண் குவளைகள், மக்கும் பொருள்களால் தயாரிக்கப்பட்ட தட்டுகள், குவளைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.