கன்று குட்டியை நடு ரோட்டில் வெட்டி கொன்ற காங்கிரஸ் தொண்டர் - ராகுல் கண்டனம்
மாட்டிறைச்சிக்கு தடை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் 18 மாத கன்றுக் குட்டியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இளைஞர் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் ரெஜிஸ் தலைமையில் இளைஞர் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்பொழுது ஒரு கன்று குட்டியை நடுரோட்டில் வெட்டி அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த சம்பவம், தற்போது வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராகுல்காந்தி, டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், கேரளாவில் நேற்று என்ன நடந்தது? இந்த செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். வன்மையாக கண்டிக்கிறேன் இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை காப்பாற்ற கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறி உள்ளார்.