Kolkata Doctor Rape And Murder Case Latest News Updates: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில், அரசு நடத்தும் அந்த ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் பலரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைதாகி உள்ள நிலையில், சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அலட்சியம் காட்டியதாக மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. 


தூக்கு தண்டனைக்கு கோரிக்கை


பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் எதிர்காலங்களில் இதேபோல் ஒரு சம்பவம் மருத்துவர்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த பெண்களுக்கோ ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்களை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒற்றை குரலாக உள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு உச்சபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.  


மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்புணர்வா? ஏன் மரபணு சோதனை முக்கிய ஆதாரம்?


இந்த வழக்கில் தொடக்கக் கட்டங்களில் இருந்தே பல சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்தன. இந்த குற்றச் சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டுமின்றி வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் இது கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் கிளம்பின. ஆனால், இருப்பினும் உடற்கூராய்வு அறிக்கையில் இதனை உறுதிசெய்யும் ஆதாரம் ஏதும் வெளியாகவில்லை. 


சஞ்சய் ராய்க்கு பாலிகிராப் சோதனை


எனவே, உயிரிழந்த பெண்ணுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய்க்கும் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது. இந்த சோதனையின் அறிக்கை வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழ்வது மட்டுமின்றி இது கூட்டு பாலியல் வன்கொடுமையா இல்லையா என்பதும் உறுதியாகிவிடும். தற்போது, குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு பாலிகிராப் சோதனை மேற்கொள்ளவும் கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சஞ்சய் ராய் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல் கூறுகின்றன. ஆனால், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா, இதன் பின்னணியை முழுமையாக அறிய இந்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் சார்பில் மூத்த பெண் வழக்கறிஞர் கபிதா சர்கார் என்பவர் ஆஜராகிறார். 52 வயதான கபிதா சர்கார் கடந்த 25 வருடங்களாக வழக்கறிஞராக செயல்படுகிறார். குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத நிலையில், இவரை நீதிமன்றமே  நியமித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


யார் இந்த கபிதா சர்கார்?


மேற்கு வங்கத்தில் உள்ள மிகவும் பழமையான ஹூக்ளி மொஹ்சின் கல்லூரியில் கபிதா சர்கார் சட்டம் பயின்றுள்ளார். இவர் தனது தொடக்க காலத்தில், ஆலிபூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் வாதாடி உள்ளார். தெற்காசிய சட்ட சேவைகள் சங்கத்தில் (SALSA) கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இணைந்த பின்னர், தன்னுடைய கவனத்தை கிரிமினல் வழக்குகளின் மேல் திருப்பினார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சீல்டா நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கிய கபிதா, குற்ற வழக்குகளில் ஆஜராகி வருகிறார். 


நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நீதி என்பது நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் சட்ட ரீதியான நீதியாக இருக்க வேண்டுமே ஒழிய விசாரணைக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட நீதியாக இருக்கக் கூடாது என்பது கபிதா சர்காரின் வாதமாக உள்ளது. ஒரு வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உள்பட அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும் வேண்டும் என்பதும் கபிதாவின் கூற்றாக உள்ளது. 


மரண  தண்டனை கூடாது


மேலும், எந்தவித குற்றத்திற்கும் மரண தண்டனை ஒரு தீர்வாக அமையாது என்றும் உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை இருக்க வேண்டும் என்பதே கபிதா சர்காரின் வாதகமாக இருக்கிறது. குற்றம் நிரூபிக்கும் வரை அவர்கள் நிரபராதி என்றும் அவர்களின் குற்றங்கள் குறித்து அவர்கள் சிந்திக்க வாய்ப்பளிப்பதும் அவசியம் என்கிறார் கபிதா சர்கார். 


மேலும் படிக்க | 150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - வெளியான பரபர தகவல்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ