கேரளாவில் சரித்திரம் படைத்தது எல்.டி.எஃப்: 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர் வெற்றி
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீண்டும் அமைவதற்கு பல காரணங்கள் உண்டு என்ற போதிலும் கேரள முதல்வரே ஒரு பெரிய காரணமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்: கேரளத்தில் சரித்திரம் படைத்துள்ளது எல்.டி.எஃப்!! கேரளாவில் நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக, ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப்-க்கும் இடையில் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருந்த கேரள மாநிலத்தின் ஆட்சியை தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக எல்.டி.எஃப் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ஆளும் எல்.டி.எஃப் (LDF) சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்கியது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் ரகுநாதனை எதிர்த்து போட்டியிட்ட அவர் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கஜக்கூட்டம் தொகுதியில் இருந்து கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெற்றி பெற்றார். கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா மட்டன்னூரிலிருந்து 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ALSO READ: Kerala Election Results: வரலாறு படைக்குமா எல்.டி.எஃப்? முன்னிலை தொடர்கிறது
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீண்டும் அமைவதற்கு பல காரணங்கள் உண்டு என்ற போதிலும் கேரள முதல்வரே ஒரு பெரிய காரணமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலனில் அவர் காட்டும் அக்கறை, அவரது அரசாங்கம் கொண்டு வந்த மக்கள் நலப் பணிகள், அவரது நேர்த்தியான ஆட்சிமுறை, கொரோனா தொற்று, நிபா வைரஸ் ஆகியவற்றை அவர் கையாண்ட பாங்கு, ஆகியவை அவரது கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளன எங்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். தங்கக் கடத்தல் ஊழல் உட்பட பல வழக்குகளில் அவரை சிக்க வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், கேரள மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை இந்த தேர்தல் மூலம் தெளிவாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் (Assembly Election) பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் போட்டியிட்டது. கேரளாவில் குறைந்தது 35 தொகுதிகளை வெல்வோம் என்ற உறுதியுடன் களமிறங்கியது இந்த கூட்டணி. எனினும், ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெண்ணிகையில் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. பாஜக-வின் (BJP) முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'மெட்ரோ மேன்' ஈ. ஸ்ரீதரன் முதல் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வரை அனைவரும் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது.
பாஜக-வுக்கு கண்டிப்பாக வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கபட்ட நெமோம் தொகுதியும் ஏமாற்றத்தை தந்தது. இங்கு களம் கண்ட முன்னாள் மிஸோராம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் தோல்வியுற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2016 தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் இங்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழகம்: அமோக வெற்றி வெற்று அடுத்த முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR