பாராளுமன்ற தேர்தல் (லோக் சபா தேர்தல் 2019) வர உள்ளதால் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் ஐந்து மணி நேரமாக நீடித்து இரவு வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கர்நாடக மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு பாஜக வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் பல முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இந்த தேர்தலில் வெட்டப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்க்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள் எனவும் தகவல்.


குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என அம்மாநில பொறுப்பாளர்கள் மத்திய தேர்தல் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து 11 புதிய வேட்பாளர்களை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.


கடந்த ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. 15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த பாஜக கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.