கலிபோர்னியாவில் நகர மேயராக சென்னை ஐஐடி மாணவர் தேர்வு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு சான்பிரன்ஸிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீப் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பிரதீப் குப்தா கலிப்போர்னியா மாகாண நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேயராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரதீப் குப்தா கூறியதாவது:- மேயராக தேர்வு செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. முந்தைய மேயர் தொடங்கிய பணிகளை தொடர்ந்து செய்வேன். எங்கள் சபையில் மிகச்சிறந்த உறுப்பினர்கள் உள்ளனர். பலர் இந்த நகரத்துக்காக பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள். எனவே இந்த சபையை வழிநடத்த நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் தெற்கு சான்பிரன்ஸிஸ்கோ நகர சபையின் உறுப்பினராக ஒரு ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யப்பட்ட குப்தா, பின்னர் நவம்பர் 2013 ஆம் ஆண்டு, நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் புருடே பல்கலைக்கழகத்தில் முதுகலைப்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சான்பிரன்ஸிஸ்கோ நகரத்தின் துணை மேயராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.