24 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே மேடையில் முலாயம்சிங் யாதவ் - மாயாவதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலத்தில் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்த  சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் கட்சி இதற்கு முன் பல சட்டசபை தேர்தல்களில்  தனித்தனியே போட்டியிட்டன. இரு கட்சிகளின் பகைமை காரணமாக அம்மாநிலத்தில் பாஜக-வின் கை ஓங்கி இருந்தது.


இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.


கடந்த காலத்தில் கூட ஒரு முறை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்த போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை காரணம் காட்டி பாரதீய ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர் கடந்த 1993-ஆம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் ராமர் கோவில் பிரச்சனையால் பாரதீய ஜனதா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்த வெற்றியை தடுக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தன. அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் உயிரோடு இருந்தார். அவர்தான் இந்த கூட்டணியை உருவாக்கினார். அப்போது நடைப்பெற்ற தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. 


முலாயம் சிங் முதல்வர் ஆனார், எனினும் கடந்த 1995-ஆம் ஆண்டு அதாவது ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம்சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஒருபோதும் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேரவே இல்லை. 


ஆனால் தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார்.  இதுவரை சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி  தற்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


வரும் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஆதரித்து மாயாவதி வரும் 19-ஆம் தேதி மைன்புரியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சார கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 


இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி, முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது.