அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது என ராகுல் காந்தி குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX மீடியா தொலைக்காட்சி நிறுவனமானது 2007ஆம் ஆண்டில் மொரிசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடாக 305 கோடி ரூபாய் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததாகவும் இதற்கு கைமாறாக கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனத்திற்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன.


இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப. சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளனர்.  



இந்நிலையில், ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் விவகாரத்தில் நடைபெற்று வரும் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகங்கள் மூலம் மோடி அரசு முயல்கிறது.இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.