தொடங்கியது பருவமழை..!! மும்பையில் கனமழை பல பகுதிகளில் நீர் தேக்கம்
ஜூன் 29 வரை மும்பை உட்பட கோவா மற்றும் கொங்கன் பகுதியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவின் தலைநகரம் மும்பையில் இந்த வருடத்திற்கான பருவமழை ஜூன் 26 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படியே மழைக்காலத்தின் முதல் கனமழை மும்பையில் இன்று பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) சாண்டா குரூஸ் மற்றும் தானே போன்ற பகுதிகளில் மிதமான மற்றும் நிலையான மழை பெய்தது.
இன்று காலை முதல் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
மும்பை பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது, “தென்மேற்கு பருவமழை மத்திய அரேபிய கடல் அருகில் இருக்கும் கொங்கன் மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும், வடக்கு அரேபிய கடல் மற்றும் தெற்கு குஜராத்தின் சில பகுதிகளிலும், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்த பருவமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
ஜூன் 29 வரை மும்பை உட்பட கோவா மற்றும் கொங்கனில் பரவலாக மழை பெய்யும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 ஆம் தேதி மும்பைக்கு வரும் பருவமழை, இந்த முறை இரண்டு வாரங்கள் தாமதத்திற்கு பிறகு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் மிக நீண்ட கால தாமதமாகும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.