ரபேல் ஊழலை மறைக்க, CBI அதிகாரிகள் நீக்கம் -ராகுல் காட்டம்!
CBI அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
CBI அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
CBI இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு இருவரையும் அழைத்துப் பேசினார். குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம், வங்கி மோசடி தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்தது.
அவரை CBI இணை இயக்குனராக நியமிக்க ஆரம்பத்தில் இருந்தே ஆலோக் வர்மா எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் ராகேஷ் அஸ்தனாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகரை அண்மையில் CBI அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ராகேஷ்குமார் மற்றும் CBI டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவேந்திரகுமாரும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்துள்ளது.
CBI வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து காங். தலைவர் ராகுல் காந்தி செய்தியார்களிடம் தெரிவிக்கையில்...
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழுவால் மட்டுமே CBI இயக்குனர் நியமனம் மற்றும் நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நள்ளிரவு 2 மணியளவில் CBI இயக்குனர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய செயல் நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாக தெரிகிறது. ரபேல் விவகாரத்தை மக்கள் மனத்தில் இருந்து மறைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்க அரசு முயன்றுவருகிறது, பிரதமரின் ஊழல் விவகாரங்கள் வெளியே வந்துவிடும் என அவர் அஞ்சுகின்றார். மக்களின் வரிப்பணம் அனில் அம்பானிக்கு திருப்பி விட்டுள்ள மத்திய அரசு விளக்கம் அளித்தே ஆக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.