நீட் தேர்வுக்காக கேரளா வரும் அனைவருக்கும் உதவி -பினராயி விஜயன் உறுதி
கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு நேச கரம் நீட்டியுள்ளார் ம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
வரும் 7-ம் தேதி நாடு முழுதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருப்பவர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வெளி மாநிலங்களில் சென்று தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனால் தமிழக மாணவ-மாணவிகள் வெளிமாநிலத்திற்க்கு சென்று தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்க்கு செல்லும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு பலர் உதவி கரம் நீட்டி உள்ளனர். இந்நிலையில், கேரளா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். அதுக்குரித்து அவர் கூறியதாவது:-
“நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.” இவரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.