நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்த வழக்கில் வரும் 20 ஆம் தேதி விசாரணை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பிழை இருந்த 49 வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 


மதிப்பெண் பட்டியலை திருத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 


இந்த தீர்ப்பினை எதிர்த்து மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நேற்று (திங்கள் கிழமை) மேல் முறையீடு தாக்கல் செய்தது. 


இந்நிலையில், இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்ற சிபிஎஸ்இ -யின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்து உள்ளது. மாணவர் சத்யாதேவர் தொடர்ந்த வழக்கையும் 20 ஆம் தேதியே விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.