மனித சமூகம் என்பது பல வித மனிதர்களால் ஆன ஒரு கூட்டமாகும். பல குணாதிசயங்களைச் சேர்ந்த பலர் ஒன்றாக சேர்ந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். நம் வாழ்நாளில் நாம் பல சம்பவங்களை, நிகழ்வுகளைக் காண்கிறோம், அவற்றைப் பற்றி படிக்கிறோம். சிலவற்றை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலவற்றின் நினைவுகளிலிருந்து தூரமாய் ஓட நினைக்கிறோம். ஆனாலும், அவற்றின் கொடூரம் நம்மை துரத்திப் பிடித்து விடுகிறது. அப்படி நாம் மறக்க நினைத்தாலும், நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு சம்பவம் தான் நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.


நிர்பயாவின் (Nirbhaya) இந்த வழக்கில் ஒரு முடிவு வந்திருக்கலாம். ஆனால், அது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதே கருத்துதான் நிர்பயாவின் தந்தைக்கும் உள்ளது.


2012 டிசம்பர் 16 ஆம் தேதி இரவு தொடங்கி 17 ஆம் தேதி அதிகாலை வரை நிர்பயா என்று குறிப்பிடப்படும் 23 வயதான பிசியோதெரபி இன்டர்ன், தெற்கு டெல்லியில், நடுங்கும் குளிரில், நகரும் பேருந்தில் ஆறு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் (Gangrape) செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். அவர் டிசம்பர் 29, 2012 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் காலமானார்.


இந்த ஆறு பேரில் நான்கு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு 2020 மார்ச் 20 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் ஒருவரான ராம் சிங், இந்த வழக்கில் விசாரணை தொடங்கிய சில நாட்களில் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மற்றொருவர், ஒரு சிறார் என்ற காரணத்தால், மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் கழித்துவிட்டு, 2015 இல் விடுவிக்கப்பட்டார்.


கொடூரமான இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கின் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ட்ரன் அண்ட் யுவா’-வால் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரச்சாரத்தில் இணைந்த நிர்பயாவின் தந்தை, "இந்த போர் இன்னும் முடிவடையவில்லை" என்று கூறினார்.


"நான் அவ்வளவாக இது பற்றி பேசியது கிடையாது. ஆனால், இன்று நான் பேச வெண்டியது அவசியம் என்று நான் உணர்ந்தேன். என் பெயர் பத்ரிநாத் சிங். ஆனால் 2012 டிசம்பர் 16 இரவு முதல் நான் 'நிர்பயாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறேன். இப்படித்தான் நான் என் வாழ்நாள் முழுவதும் அறியப்படுவேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


“எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் எங்களிடமிருந்து மிகவும் மிருகத்தனமான முறையில் பறிக்கப்பட்டபோது, ​​பெண்கள் தலைமையிலான பல கூட்டங்கள் தெருக்களில் வந்து போராடின. மேலும் அவர்கள் எனது குடும்பத்தின் நீதிக்கான போராட்டத்தை தங்கள் போராட்டமாக எடுத்துக்கொண்டார்கள். என் மகளை கொடூரமான முறையில் நான் இழந்தாலும், இந்த போராட்டங்களுக்குப் பிறகு நம் நாட்டில் இதற்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என நான் நம்பினேன். நிலைமை மாறும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் செய்திகளைப் பார்க்கும்போதும், படிக்கும்போதும், யாரோ ஒரு பெண், ஒரு மகள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டதாக, தாக்கப்பட்டதாக வரும் செய்திகளை நான் பார்க்கிறேன். இன்னும் இங்கு எதுவும் மாறவில்லை" என்று நிர்பயாவின் தந்தை கூறினார்.


ALSO READ: மீண்டும் ஒரு நிர்பயா வழக்கு... தனியார் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம்..!


சட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டாலும், மக்களின் மனம் மாறினால்தான், நிரந்தர மாற்றம் வரும். பெண்கள் பலவித கொடுமைகளை அனுபவிக்கையில், ஆண்கள் ஊமையான பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.


"எனவே, ஒவ்வொரு ஆண்மகனும், பெண்களின் பாதுகாப்பிற்கான போராட்டத்தில் ஒரு தீவிர ஆதரவாளராக வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு பெண் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் குறித்த அச்சுறுத்தல் அவருக்கு விடுக்கப்பட்டால், அதைப் பற்றி பேசுங்கள், அதை எதிர்த்து பேசுங்கள். உங்கள் அருகில் இப்படி நடப்பதைக் கண்டாலும், அதை எதிர்த்து குரல் கொடுங்கள்." என்று அவர் கூறினார்.


முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோர் மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். உலகம் முழுவதும் நிர்பயா, அதாவது அச்சமற்றவர் என அறியப்படும் 23 வயது பெண்ணிற்கு அவர்கள் செய்த கொடூரத்திற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.


ALSO READ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த காம கொடூரன் கைது!!


அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய பின்னர், நடுங்கும் குளிரில், அவரை சாலையில் தள்ளிவிட்டு சென்றனர். நிர்பயாவுடன் இருந்த அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டு அவருடன் சேர்த்து வெளியே எறியப்பட்டார். தில்லியில் (Delhi) ஒரு மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது. பின்னர் சிகிச்சைக்காக நிர்பயா சிங்கப்பூருக்கு (Singapore) அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.


நிர்பயாவுக்கு நடந்த கொடூரம் நாட்டையே உலுக்கிப் போட்டது. நாடு முழுவதும் அவருக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நிர்பயாவின் தந்தை கூறுவதுபோல இன்னும் நிலைமை ஒன்றும் பெரிதாக மேம்பட்டுவிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR