2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை
பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் , இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் பாதிக்கு பாதி சரிந்துள்ளது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே பின் தங்கி உள்ளார். இதே போன்று, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பின்னடைவை சந்தித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை பிரியங்கா காந்தியே தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய நிலையில் காங்கிரஸ் கட்சியால் இரட்டை இலக்கங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.
மேலும் படிக்க | Manipur Election Results 2022 Live Updates: பாஜக 14 இடங்களில் முன்னிலை
பஞ்சாப்பில் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி புரிந்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஆளுங்கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இந்த 5 மாநில தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கட்சியை மறுசீரமைப்பது குறித்து கட்சித்தலைமை சிந்திக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கருத்து தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான பெரிய கட்சியான காங்கிரஸின் இந்த சரிவு மூத்த தலைவர்கள் மட்டுமன்றி தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் படிக்க | LIVE: Uttarakhand Election Results 2022: உத்திராகண்ட் தேர்தல் முடிவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR