தனியார் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததற்காக, பேருந்தின் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததற்காக, பேருந்தின் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நொய்டாவில் சுமார் 50 பேருந்துகளை வைத்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் நிரங்கர் சிங். இவருக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கியதாக கூறி, நிரங்கர் சிங்குக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியிடப்பட்ட ஆன்லைன் ரசீதை, தனது ஊழியர் மூலம் நிரங்கர் சிங் உறுதி செய்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தேவை ஏற்பட்டால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.


மேலும், போக்குவரத்துத் துறையின் அவல நிலையை இந்த ரசீது காட்டுவதாகவும், நாள்தோறும் விதிக்கப்படும் நூற்றுக்கணக்கான அபராதங்களின் நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளக்கி இருப்பதாகவும் நிரங்கர் சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த ரசீது போக்குவரத்து துறையால் வழங்கப்பட்டிருப்பதாகவும், போக்குவரத்து காவலர்களால் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.