வடகிழக்கு மாநிலங்கள்: வெள்ளப்பெருக்கத்தால் உயிர் இழப்பு 44-ஆக உயர்வு
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடுமையான வெள்ளப் பெருக்கினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதி உட்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளன.
இதனால், சுமார் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்கள், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணி வருந்துகிறேன் என இந்திய பிரதமர் தனது சமுக வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.