தலைமை தேர்தல் ஆணையராக உள்ள அச்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் ஜனவரி 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும். தலைமை தேர்தல் ஆணையராக இரு தேர்தல் ஆணையர்களில் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள ஒருவரை குடியரசு தலைவர் நியமிப்பது வழக்கமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் ஓம்.பிரகாஷ் ராவத்தை, தலைமை தேர்தல் ஆணையராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஓம் பிரகாஷ் ராவத் ஜனவரி 23-ம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். 


1977-ம் ஆண்டு மத்திய பிரதேசப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராவத் தற்போது தேர்தல் ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


தலைமை தேர்தல் ஆணையரான ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காலியாகும் அவரது தேர்தல் ஆணையர் பதவிக்கு அசோக் லாவஸா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசோக் லாவஸாவும் ஜனவரி 23-ம் தேதியே புதிய தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.