DGP நியமனத்திற்கான காலவரம்பை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் உள்ளவர்களை DGP-யாக நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது!
ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் உள்ளவர்களை DGP-யாக நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது!
DGP-க்களின் நியமனம் தொடர்பான வழக்கில், பணிநிறைவு காலம் 2 ஆண்டுகள் இருப்பவர்களையே DGP-யாக நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழகம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்நிலையில், சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, DGP நியமனத்தில், பணிநிலைவு காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் இருப்பவர்களை DGP-யாக நியமிக்கலாம் எனவம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே DGP-க்களை நியமிக்க முடியும் எனவும், மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக உச்சநீதிமன்ற கூற்றுப்படி., ஒரு மாநிலத்தில் பணியாற்றும், மூத்த ஐந்து IPS அதிகாரிகளின் பெயர்களை, மாநில அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை பரிசீலிக்கும் தேர்வாணையம், முதல் ஐந்து அதிகாரிகளில் மூவரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பும். அவ்வாறு அனுப்பப்படும் மூவரின் பெயர்களில் இருந்து மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து DGP-யாக நியமிக்க வேண்டும். DGP-யாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து DGP-யாக பதவி வகிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக DGP டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது, 'தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் மூத்த அதிகாரிகள் யாரும் இல்லை. முக்கிய அதிகாரிகள் அனைவருமே ஒரு வருடத்தில் பணி நிறைவு பெற உள்ளனர். எனவே DGP-யை நியமிக்கும் கால வரம்பை மாற்றி அமைக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.