மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதா  நிறைவேற்றப் படக்கூடாது என்று மக்களவையில் திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநிலங்களுக்கு  இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. எனவே, அணைகள் பாதுகாப்பில்  பொதுவான நடைமுறையை கொண்டு வரும் வகையில் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவை ஜல்(நீர்) சக்தி துறை அமைச்சர் கஜேந்திர  சிங் செகாவத் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். 


ஆனால், இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அதிர் ரஞ்சன் சவுத்ரி, தருண் கோகாய், சசிதரூர்,  மணீஷ் திவாரி, பிஜூ ஜனதா தள உறுப்பினர் மஹ்தப், திரிணாமுல் காங்கிரஸ்  உறுப்பினர் சவுகதா ராய் மற்றும் திமுக எம்.பி, ஆ.ராசா, ஆர்எஸ்பி எம்.பி  பிரேமசந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீர் என்பது  மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த மசோதாவுக்கு சட்டரீதியான  தகுதி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


மசோதா தொடர்பான விவாதத்தில் பிஜூ ஜனதா தள எம்.பி மஹ்தப்  பேசுகையில், ‘‘இந்த மசோதா மூலம் மாநில அரசுகளுக்குரிய அதிகாரத்தை பறிக்க  மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’  என்றார். காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பேசுகையில், ‘‘அணை பாதுகாப்பு  அமைப்பில் இடம் பெறுபவர்கள் யார் என்பதை இந்த மசோதா விளக்கவில்லை’’  என குறிப்பிட்டார். காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘அணை  செயல்பாடு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதைவிட, அணை கட்டுப்பாட்டு  பாதுகாப்பில்தான் இந்தமசோதா கவனம் செலுத்துகிறது. இது குறித்து விரிவான  விவாதம் நடத்தப்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.


‘‘மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு தலையிடுவது  ஏன்? என திரிணாமுல் எம்.பி சவுகதா ராய்  கேள்வி எழுப்பினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு  அனுப்பும்படி திமுக எம்.பி ஆ.ராசா கூறினார். இதற்கு பதில் அளித்து  பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், ‘‘நாட்டில் உள்ள 92% அணைகள்,  மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. எனவே,  அணைகள் பாதுகாப்புக்கு பொதுவான விதிமுறைகள் தேவைப்படுகிறது’’ என்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.


பாராளுமன்றத்தில் இதுவரையில் மூன்று முறை இதுபோன்ற அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டும், மாநிலங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.