தமிழக விவசாயிகளுக்கு பிற மாநில விவசாயிகள் ஆதரவு!
தமிழக விவசாயிகள் 14-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 100 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள விரோதபோக்கினை கைவிட வலியுறுத்தி டெல்லியில் 14 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 14 நாட்களும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் நாளுக்கொரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தூக்கு கயிறு போராட்டம், மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு போராட்டம் என விவசாயிகள் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் சாலையில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து, அவருக்கு மாலையிட்டு, மலர்களை தூவி, வாயில் துணியை கட்டி பார்ப்பதற்கு ஒரு சடலம் போல படுக்க வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடபட்டனர். மேலும், அதன் அருகில் மண்டை ஓடுகளை வைத்து சுற்றிலும் மற்ற விவசாயிகள் அமர்ந்து கொண்டு, சங்கு ஊதி ஒப்பாரி வைத்தனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேறினால்தான் தமிழகத்திற்கு திரும்புவோம் என்று உறுதியுடன் விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழர்கள் பலர் உணவளித்து உதவிகளை செய்து ஆதரவளித்து வருகின்றனர்.
உழவர்களின் மன வலிமைக்கு மேலும் உறுதி சேர்ப்பது போன்று உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.