ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை கடந்த 20 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தத்தோடு தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கூறினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் சூழலில் உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மீண்டும் ப.சிதம்பரம் தரப்பினர் நீதிபதி ரமணாவிடம் முறையிட்டனர். அப்பொழுது நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்ததோடு, ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று(ஆகஸ்ட் 21) விசாரணை நடத்த முடியாது. ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரிக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.
நீதிபதி ரமணா கருத்தை அடுத்து, அன்றே மாலை 4 மணிக்கு மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்து காத்திருந்தது. அயோத்தி வழக்கை குறித்து இன்றைய விசாரணை முடிந்ததை அடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கலைந்து சென்றது. இதனால் தலைமை நீதிபதியிடம் இன்று ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கமுடியவில்லை. இதன்மூலம் ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி விசாரணை நடைபெறாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, 25 மணி நேரத்திற்குப் பிறகு இரவு சிதம்பரம் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்தநிலையில், மேல்முறையீடு மனு மற்றும் தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவில்லை என்று நீதிபதி பானுமதி அறிவித்ததாக கபில் சிபில் தெரிவித்தார்.
அதேபோல ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டார். சிபிஐ ஏற்கனவே கைது செய்துவிட்டதால் வழக்கு காலவதியாவிட்டது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சிதம்பரத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.