பெயிலா? சிறையா? ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கு நாளை ஒத்திவைப்பு
அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வழக்கை நாளை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
புதுடெல்லி: அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வழக்கை நாளை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, 5 நாள் காவலில் வைத்து விசாரித்து வருகிறது சிபிஐ.
இந்தநிலையில், மேல்முறையீடு மனு மற்றும் தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி பானுமதி, சிபிஐ ஏற்கனவே கைது செய்துவிட்டதால் வழக்கு காலவதியாவிட்டது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சிதம்பரத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சி.பி.ஐ காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவில்லை என்றும் நீதிபதி பானுமதி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணை நாளைக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் தெரிவித்தனர்.