நாளை ஐதராபாதில் மெட்ரோ சேவையை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை(28-ம் தேதி) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் உதவியுடன் ஐதராபாதில் மெட்ரோ ரெயில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஐதராபாத் மெட்ரோ சேவையை மியாபூர் ஸ்டேஷனில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை 2.25 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இவருடன் தெலுங்கானா மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர். ஐதராபாத் மெட்ரோ சேவை தொடக்கி வைப்பதுடன் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளனர். அதன்பின்னர், மறுநாள்(29-ம் தேதி) காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
முதல் கட்டமாக நாகோல் முதல் மியாபூர் வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடைபெறும். இதில் மொத்தம் 24 மெட்ரோ ஸ்டேஷன் இடம் அடங்கும். ஐதராபாத் மெட்ரோ சேவை திட்டம் சுமார் 14,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. மொத்தம் 72 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.