நாட்டின் பல பகுதிகளில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை உயர்வு
வெங்காயத்தை தொடர்ந்து, உருளைக்கிழங்கு விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பீதிக்குள்ளாகி வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து, உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது. விலையை குறைக்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. துருக்கி, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தாலும் வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் உருளைக்கிழங்கு விலையும் உயர்ந்து வருகிறது.கோவையில், கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையான உருளைகிழங்கு, நேற்று, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேசமயம் டெல்லி ஆசாத்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் நேற்று உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.32 ஆக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருளை கிலோ ரூ.18-க்கு மட்டுமே விற்பனை ஆனது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உருளைக்கிழங்கு விலை தற்போது 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உருளை விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு பரேலியில் இருந்து உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுகிறது. மும்பையிலும் உருளை விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. அங்கு தற்போது கிலோ ரூ.32-க்கு விற்பனையாகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.