ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் நேற்று வழங்கப்பட்டது. பெங்களூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ரூபாவிற்கு அந்த விருதை வழங்கினார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கபட்டு உள்ளார். இந்நிலையில் கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்தார். சசிகலாவுக்கு சிறையில் பல வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டிருப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப் பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற ரூபா, தற்போது பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.