பிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல்
சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திறந்து அரங்கிலேயே தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
ஆனால் இந்த ஆண்டு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பாதுகாப்பை ஏற்று, குண்டுதுளைக்காத வளையத்திற்குள் இருந்து உரை நிகழ்த்துமாறு மோடியிடம் அறிவுறுத்துமாறு தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலிடம் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசகரின் யோசனையை பிரதமர் மறுக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலை, அதிகரித்து வரும் பயங்கரவாத ஊடுருவல்கள் ஆகியவற்றுடன் உலகம் முழுவதிலும் அதிகரித்து வரும் ஐஎஸ்., அமைப்பின் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றால் இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது செங்கோட்டையை சுற்று பலத்த பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் அல்குவைதா, லக்ஷர் இ தொய்பா, ஜெய்சி இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புக்கள் மோடியை தாக்க குறி வைத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
செங்கோட்டை மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.