தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர், தற்போது தன் தாயைப் பழிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தார்பூரில் (Chhatarpur) பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை "மாமா" என அவதூறு செய்பவர்கள் தங்கள் சொந்த "மாமாக்களான" குவாத்ரோச்சி, வாரண் ஆண்டர்சன் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். போபர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய குவாத்ரோச்சியும், போபால் விஷவாயு கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாரண் ஆண்டர்சனும் சிறப்பு விமானத்தில் தப்பிச் செல்ல காங்கிரஸ் தான் உதவியதாக குற்றம்சாட்டினார்.


சுமார் 4 தலைமுறை காங்கிரஸ் ஆட்சியையும், தேநீர் வியாபாரியான தனது 4 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறிய பிரதமர், தம்முடைய ஆட்சியில் நாடு புதிய உச்சங்களை தொட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராஜ் பப்பார் (Raj Bhabbar) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மோடியின் தாயார் வயது அளவுக்கு சரிந்ததாக விமர்சனம் செய்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக சாடினார். தெருச்சண்டையின்போது யார் பக்கம் நியாயமில்லையோ அவர்கள் எதிராளியின் தாயாரை பற்றி வசைமாரி பொழிவதை பார்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட மோடி, தன்னுடன் மோது துணிச்சலை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சியினர் தன் தாயைப் பழிப்பதாகக் குற்றம்சாட்டினார்.




இந்திய மக்கள்தான் தங்களுக்கு மேலிடம் என்றும், பாஜக ஆட்சி என்பது மேடம் ஒருவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கும் ஆட்சி அல்ல என்றும் சோனியா காந்தியை மறைமுகமாக சாடினார். பிறக்கும்போது கையில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்கள் குழம்பிப் போயிருப்பதாகவும், அவர்களது கட்சியோ ஃபியூஸ் போய்விட்டதாகவும் ராகுல்காந்தியையும் மறைமுகமாக சாடினார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசை தோற்கடித்தவர்கள், மீண்டும் அந்த ஆட்சியினால் தங்கள் வாரிசுகள் அவதிப்பட அனுமதிக்கப் போகிறார்களா எனவும் மோடி கேள்வி எழுப்பினார். அப்படிப்பட்ட நிலையை விரும்பவில்லை என பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.