உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், ஆனால் CAA சட்டத்தை திரும்ப பெற முடியாது என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ: அயோத்தியில் 3 மாதத்தில் ராமர்கோயில் கட்டுமானப் பணி தொடங்கும் என்று லக்னோவில் அமித்ஷா கூறியுள்ளார். சிஏஏ சட்டம் பற்றி ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜனவரி 21) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆதரவு பேரணியில் உரையாற்றினார். அப்போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடிக்கொள்ளலாம். ஆனால், நாங்கள் பின்வாங்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டபட்டமாக தெரிவித்துள்ளார். 


அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா.... பொய் பிரசாரம் மூலம் நாட்டை பிரிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கவே, இந்த பேரணி நடக்கிறது. பாகிஸ்தான் சொல்வதை காங்கிரஸ் விரும்புகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணமுல் கட்சிகள் வன்முறையை தூண்டி விடுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து, எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதற்கான இடத்தை தேர்வு செய்ய முடியுமா என ராகுல், மம்தா, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு சவால் விடுகிறேன்.


இந்திய சுதந்திரத்தின் போது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்த சிறுபான்மையினர் இன்று பெரும்பாலான அளவு குறைந்துவிட்டனர். அவர்கள் எங்கு செல்வார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள். இதற்கு அவர்கள் கட்டாயம் பதில் கூற வேண்டும். யாரின் குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம், குடியுரிமை சட்டத்தில் இல்லை. குடியுரிமை வழங்கவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 



காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. நேரு செய்ய முடியாததை மோடி செய்துள்ளார். முத்தலாக் மசோதாவையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடலாம். நாங்கள் பின்வாங்க மாட்டோம்.


ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், ராமர்கோயில் கட்டுமானப் பணி, 3 மாதத்தில் துவங்கப்படும்" என ஆதரவாளர்கள் மத்தியில் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.