காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 11 அமைச்சர்கள் இன்று காஷ்மீருக்கு பயணம்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு நாளை செல்லவுள்ளனர். அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீநகர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாகவும் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


காஷ்மீரில் தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெல்ல மெல்ல தொலைப் பேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை முழுவதும் சீரடைந்த பின்னர் படைக்குவிப்பு திரும்பப் பெறப்படும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து, இந்த பயணத்தின் போது அவர் ஆய்வு மேற்கொள்வார் என கூறப்படுகிறது. 


மேலும், காஷ்மீர் மக்கள் மற்றும், வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களையும் சந்தித்து, ராகுல் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர், காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 


முன்னதாக காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டிய ராகுலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆளுநர் சத்தியபால் மாலிக், காஷ்மீர் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கின்றனர் , என்பது குறிப்பிடத்தக்கது.