குஜ்ஜார் சமூக மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -அசோக் கெலட்!
குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்!
குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்!
கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் சமூக மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ராஜஸ்தானில் நான்காவது நாளாக தொடர்ந்து குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போன்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ஆம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ஆம் நாள் துவங்கி மீண்டும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரயில்கள் செல்லும் தண்டவாளத்தின் மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து இரவு, பகலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக அப்பகுதி வழி செல்லும் 55-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இதனையடுதுத இப்பகுதியில் அசம்பாவிதம் அதிகரிக்க, கூடுதல் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது அம்மாநில முதல்வர் அசோக் கெலட், குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என தெரிவித்துள்ளார்.