காங்கிரஸ் - DMK கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லை: ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஜெயிலிலும் பலர் பெயிலிலும் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்!!
காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஜெயிலிலும் பலர் பெயிலிலும் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்!!
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா அபார வளர்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார். உலக அளவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும் என உறுதியளித்தார். மத்தியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்ததும் வரும் 2022 ஆம் ஆண்டு கான்கிரிட் வீட்டுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடிசையில்லா இந்தியாவாக மாறும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் இவர் பேசுகையில், நடைபெறவுள்ள தேர்தலில் மூன்று முக்கிய தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நாம் இழந்து நிற்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கியிருந்த பாரதம், பிரதமர் மோடி பதவியேற்றதற்குப் பின் தனது மதிப்பை உலக அரங்கில் அதிகரித்துக்கொண்டே செல்வதாக தெரிவித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்யப்படும். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக ரெயில் விடுவதற்கான ஆய்வுப்பணிகள் வேகமாக நடந்துவருகிறது.
இந்த ஆய்வுக்கு பிறகு 3 அல்லது 4 ஆண்டுகளில் பெரம்பலூருக்கு ரெயில் விடப்படும். காஷ்மீரில் புலவாமா தாக்குதலில் 42 ராணுவவீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்திய ராணுவத்தினரின் வீரத்தை கேலிசெய்கிறார்கள். பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம். பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தாலோ தக்க பதிலடி கொடுப்போம் என தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.