1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1984 அக்டோபர் 31 ஆம் நாள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும் டெல்லியில் இரு தினங்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன.


கிழக்கு டெல்லியில் திரிலோக்புரி என்னுமிடத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 88 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் தற்போது 47 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.  


இது குறித்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பளித்ததுடன் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 88 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். 


விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் முறையீட்டு மனுவை சமீபத்தல் தள்ளுபடி செய்தது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தும் அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும், கேப்டன் பக்மல், கிரிதாரி லால், டெல்லி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோக்கர் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கிஷன் கோக்கர் மற்றும் மகேந்தர் யாதவ் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிவினையின்போது பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து சீக்கியர்களுக்கு எதிரான கோரப் படுகொலைகள் நடந்துள்ளன. அரசியல் செல்வாக்கை வைத்து தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்பி விட்டனர் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி வரும் 31-12-2018 அன்றைய தினத்துக்குள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி சஜ்ஜன் குமார் சரணாகதி அடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன. 


இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. 


இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்து உத்தரவிட்டதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.