INX மீடியா விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
சிபிஐ பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!!
சிபிஐ பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் செப்.5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி பானுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ. 1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம் ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்தது.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் உள்ளது. அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. காவல் வரும் 24ஆம் தேதி முடிவடையும் நிலையில் அன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை மீது விசாரணை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.