SC on Demonetization : பணமதிப்பிழப்பு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ; ஒரு நீதிபதி மட்டும் எதிர்ப்பு!
Supreme Court on Demonetization : மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நால்வர் ஆதாரவாகவும், ஒருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
Supreme Court on Demonetization : 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை செல்லாது என அறிவித்தது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும், கருப்பு பண பதுக்கலை வெளிக்கொண்டு வந்து பொருளாதாரத்தை சீராக்கும் முயற்சியில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுமார் 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்ததன் மூலம், ஒரே இரவில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இந்த மனுக்கள் குற்றஞ்சாட்டினர்.
இரு தரப்பு வாதம்
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளும், முடிவுகளும் அரசால் எடுக்கப்படக்கூடாது என்றும், இதனை நீதிமன்றம் ரத்த செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனர்.
மத்திய அரசு தரப்பில்,"உறுதியான நிவாரணம் வழங்க முடியாத ஒரு விஷயத்தை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. இது 'கடந்த காலத்திற்கு திரும்பிச் செல்வது போன்றது' அல்லது 'உடைத்து போட்ட முட்டையை மீண்டும் பழையபடி கொண்டுவருவதை போன்றது'. பணமதிப்பு நீக்கம் என்பது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு. கள்ள நோட்டுகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மிகப்பெரிய வியூகத்தின் ஒரு பகுதி" என எதிர்வாதம் வைக்கப்பட்டது.
4 : 1 தீர்ப்பு
இதையடுத்து, பணமதிப்பிழப்பிற்கு எதிராக வந்த அத்தனை மனுக்களையும் ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றம் ஒரே வழக்காக விசாரித்தது. அதனை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வு குளிர்கால விடுமுறைக்கு முன் வாதங்களை கேட்டது. நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோர் அமர்வின் மற்ற உறுப்பினர்களாவர்.
இந்நிலையில், இந்த அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அமர்வின் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அவர்கள் தங்கள் தீரப்பில்,"இந்த முடிவை மத்திய அரசு தொடங்கியதால் மட்டும் தவறு என கூற முடியாது. விகிதாச்சார அடிப்படையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது.
நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் அளித்தது நியாயமானதுதான். இந்திய ரிசர்வ் வங்கியுடன் (ஆர்பிஐ) கலந்தாலோசித்து, ஆறு மாதங்களுக்கு இருவருக்கும் இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். "ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், இதுகுறித்து முடிவு எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும் படிக்க | செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் என்ன? ஏன் கூடவில்லை? தொடரும் கேள்விகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ