புது டெல்லி: இந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.


கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால், அவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் செய்தி படிக்க: வரும் கல்வியாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு துவங்கப்படும்


இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.


மார்ச் 16 முதல், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. 


அநேகமாக, ஜூலை மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தனிமனித இடைவெளி பராமரிக்கப்பட்டு, 30% மாணவர் வருகையுடன், பள்ளிகள் இரண்டு ஷிஃப்டுகளில் இயக்கப்படக்கூடும்.


கொரோனா கட்டுபாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மற்றவர்களை பின்பற்றச் செய்யவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் எந்த வித கூட்டங்களும் நடைபெறாது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்தி படிக்க: ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்...


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த 10 நாட்களுக்குப் பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை விரைவில் மீண்டும் திறக்க, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 


பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது வகுப்புகளில் 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே..
மே 14, வியாழனன்று, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ட்விட்டரில், ஆசிரியர்களுடன் நேரலையில் தொடர்புகொண்டு, கோவிட்-19 முடக்கநிலை அமலில் இருக்கும் நிலையில், கல்வி முறை தொடர்பான அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில், பள்ளிகள் 30% மாணவர் வருகையுடன் விரைவில் மீண்டும் திறக்கக்கூடும் என குறிப்பிட்டிருந்தார். 


பாலிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், 30% மாணவர் வருகை மட்டுமே இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.


தனிமனித இடைவெளியை பின்பற்றினால், ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் எவ்வாறு அமர முடியும்?" என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கேட்டிருந்தார்.


மேலும் செய்தி படிக்க: தமிழக அரசு நடத்தும் NEET பயிற்சி வகுப்புகள் ஜூன் நடுப்பகுதியில் துவங்கும்...


"ஒரு வகுப்பறையில் தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும், 30% மாணவர்கள் மட்டுமே வர வேண்டும் என்ற நிலையில், பள்ளிகளை மீண்டும் திறக்கும்போது, என்னவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் ஆராய வேண்டும்" என்று போக்ரியால் கூறினார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு இப்போது மிகவும் முக்கியமானது" என்பதை அவர் வலியுறுத்தினார்.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க, யு.ஜி.சி மற்றும் என்.சி.இ.ஆர்.டி வழிகாட்டுதல்களை வகுத்து வருகின்றன 
அதே வெபினாரில், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை யுஜிசி தீர்மானிக்கும், அதே போல், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை என்.சி.இ.ஆர்.டி தீர்மானிக்கும் என போக்ரியால் விளக்கினார்.


பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் சற்று மாறுபடும்:
இந்த வழிகாட்டுதல்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நன்கு அறியப்பட்ட மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட்ட முறைகளில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மீண்டும் திறக்க உதவும்.


மேலும் செய்தி படிக்க: COVID-19 முழு அடைப்பால் தமிழகம் சுமார் ரூ.35,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது...


பாதுகாப்பு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும், பள்ளிகளில் உடல் வெப்ப ஸ்கேனர்கள் நிறுவப்படும். மூன்று இருக்கை கொண்ட பெஞ்சுகளில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர்வார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலமாக தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது கவனிக்கப்படும். 


மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், வழிகாட்டு நெறிமுறைகள் அச்சிடப்பட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்படும். தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளின் சப் டிவிஷனல் மேஜிட்ரேட் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் கோவிட் -19 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றங்களைச் செய்துக் கொள்வார்கள். 


கல்வியாளர்களுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்க என்.சி.இ.ஆர்.டி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோயால் சில நாட்கள் வீணாகிவிட்டதால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.


பள்ளிகளை மீண்டும் திறந்து, தேர்வுகளை நடத்த திட்டமிடும் மாநிலங்கள்:
கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் பள்ளிகளை மீண்டும் திறந்து, வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர, இந்தியாவில் சில மாநிலங்கள் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


பொதுத் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மீண்டும் ஒரு வழக்கத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், முடக்கநிலை அமலில் இருப்பதால், நீண்ட காலமாக வீட்டிலேயே இருப்பது அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றியிருக்கலாம். 
இருப்பினும், கோவிட் -19 பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாக பாரமரிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் எந்தவொரு நிலையிலும் தேர்வுகளை விட, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பே முக்கியமானது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.


மேலும் செய்தி படிக்க: COVID-19 பின் எந்த நெருக்கடி வந்தாலும் சமாளிக்கும் திறனை கேரளா பெற்றுள்ளது...


சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும். ஐசிஎஸ்இ / ஐஎஸ்சி தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை நடைபெறும். 
தனிமனித இடைவெளியை உறுதி செய்ய, சிபிஎஸ்இ தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 


மேலும், கோவிட் -19 ஆபத்து அதிகமாக இருக்கும் சிவப்பு மண்டலங்கள் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு தேர்வு மையங்களும் அமைக்கப்படாது என்பதை சிபிஎஸ்இ உறுதி செய்துள்ளது. மாணவர்கள் நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்ப்பதற்காக, பிற தேர்வு மையங்களைத் தவிர்த்து, மாணவர்களின் சொந்த பள்ளிகளிலேயே பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


கேரளா பொதுத் தேர்வுகள், அதாவது, எஸ்.எஸ்.சி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மே 26 முதல் தொடங்குகின்றன. அதற்கான சில முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு பட்டியலிட்டுள்ளது.


மொத்தத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களின் கம்பீரக் குரல்களையும், மாணவர்களின் மகிழ்ச்சி நிறைந்த முகங்களையும், புத்தகங்களின் சலசலப்பையும், பள்ளி மணியோசையின் ரீங்காரத்தையும்.. மீண்டும்  கேட்கவும் பார்க்கவும் நேரம் வந்துவிட்டது!!


(செய்தி: ஸ்ரீப்ரியா சம்பத்குமார்)